டில்லி
ராணுவ அதிகாரிகளுக்கான பயணப்படியைத் தொடர்ந்து மேலும் பல சலுகைகளை மத்திய அரசு நிறுத்தி வருகிறது.
ராணுவ அதிகாரிகள் அவசரப்பணிக்காக செல்லும் போது அவர்கள் செலவு செய்யும் பயணம் மற்றும் இதர செலவுகளுக்கான படிகள் உடனடியாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் ராணுவ கணக்காளர் அலுவலகம் நிதிப் பற்றாக்குறையால் பயணப்படி மற்றும் இதரப் படிகள் வழங்குவதை நிறுத்தி விட்டதாக அறிவித்தது. இதனால் ராணுவ அதிகாரிகள் அவசரப்பணிக்காக செல்ல தயங்கி வருகின்றனர்.
அதே போல் ராணுவ வீரர்களுக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்கள் ராணுவ ஒருங்கிணைந்த விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. இங்கு விற்பனை ஆகும் பொருட்கள் மிகவும் தரமானதாக மட்டுமின்றி மலிவு விலையிலும் கிடைக்கும்.
இது ராணுவத்தினருக்கு அரசு வழங்கும் சலுகை ஆகும்.
இந்நிலையில் ராணுவத்துறை தலைமை அலுவலகம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “நிதிநிலை குறைபாடு காரணமாக ராணுவத் துறை தலைமை அலுவலகம் 2019 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிடுகிறது.
இந்த விற்பனை மீண்டும் 2019ஆம் வருடம் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. அதனால் எந்த ஒரு விற்பனை நிலையமும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கோரிக்கைகலை ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் அதற்காக எந்த ஒரு முகவருக்கும் முன்பணம் செலுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ராணுவ அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. நாடு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதா என பலரும் அரசிடம் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.