சென்னை:  ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.  சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்து துறையில் ஏஐ தொழில்நுட்பம்  கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை மத்திய சாலை அமைச்சர் நிதின் கட்கரி  டெல்லியில் நடந்த 12வது டிராஃபிக் இன்ஃப்ராடெக் எக்ஸ்போவில் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியவர்,  “இந்தியாவின் சாலைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அரசு, தனியார் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. பெரும்பாலும் 18 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்களே இதில் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக உள்ளது.

மேம்பட்ட பொறியியல் தீர்வுகள், சட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்காமல் சாலைப் பாதுகாப்பை அடைய முடியாது. தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்துவதில் தனியார் துறையைச் சோ்ந்த நிபுணர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சிறந்த திட்டங்கள் செயல்படுத்துவதை இந்த பிரத்யேக நிபுணர் குழு உறுதி செய்யும். விரைவான மேம்பாடுகளை இலக்காகக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் இந்தக் குழுவின் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும்.

சுங்கச்சாவடி வசூலில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் கட்டண அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கேமராக்கள் போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், உயர் தரத்தைப் பராமரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதில், எந்தவொரு நிறுவனத்திடமிருந்து தீர்வுகள் வந்தாலும், தரம் மற்றும் தரநிலைகளில் சமரசம் செய்யப்படாது.

புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் அரசாங்க ஏலங்களில் பங்கேற்கின்றன. அவை, லாப வரம்புகளைப் பராமரிக்கும் அதே வேளையில் செலவு மற்றும் செயல்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இதுபோன்ற சிறந்த தொழில்நுட்பங்கள் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் சாலை பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த முடியும்”

இவ்வாறு  கூறினார்.