புதுடெல்லி : 
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த வருடம் ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நிலவிவரும் கொரோனா அச்சத்தின் காரணமாக, ஒழுங்குமுறை இணக்க தேவைகளை பூர்த்தி செய்ய வரி செலுத்துபவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். இதனால் CBDT பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த வருடம் மார்ச்- 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
முன்னதாக இந்த வருடம் மார்ச் 31-ஆம் தேதிதான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தார்.
மேலும் மத்திய அரசு கடந்த வருடம் ஒரு அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தி இருந்தது,  வருமான வரித்துறை மற்றும் அதற்க்குட்பட்ட இதர சட்டதிட்டங்களை சரி செய்யவும், மார்ச் 31-ஆம் தேதியே இறுதியான நாள் என்று அறிவித்திருந்த நிலையில், மார்ச் மாதம் ஜூன் 30- ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தது, ஆனால் தற்போது வருமானவரித்துறை மற்றும் அதற்க்குட்பட்ட இதர சட்டதிட்டங்களை  சரி செய்யவும் நவம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு.  இந்த நடவடிக்கைகளின் பெரும்பாலான நோக்கம் கொரோனா வைரஸால் பலர் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது எதுவும் செய்ய முடியாது என்பதால், தளர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மிக அவசரமான வேலைகளில் பான் கார்டை பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல், வருமான வரி சட்டத்தின் கீழ் பிரிவு எண் 272B  படி பான் கார்டை ஆதார் என்னுடன் இணைக்காதவர்கள் ஒவ்வொருவரும் ரூபாய்.10,000 அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அரசு அறிவித்துள்ளது.