சென்னை
நடிகை கஸ்தூரி இட ஒதுக்கீடு மூலம் அரசுப்பணி பெற்ற ஊழியர்களை ஊழல்வாதிகள் என்றதற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று தமிழக அரசு தலைமை செயலக ஊழியர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”நடிகை கஸ்தூரி கடந்த 04.11.2024 திங்கட்கிழமை அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு வந்த பின்னர்தான் லஞ்ச லாவண்யம் மலிந்து விட்டது எனவும் இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்தவர்கள் செய்த ஊழல்களால் பல்வேறு வகைகளில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இது தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்த ஊழியர்கள்மீது கூறியுள்ள நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வன்மையாகக் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் 1967ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்தான், தந்தை பெரியாரின் கனவினை நனவாக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களுக்கு பல்லாயிரமாண்டு கால ஒடுக்கப்பட்ட இழிநிலையினைக் களைந்து, இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தினை கையிலெடுத்து விடியலைத் தந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையில் திராவிடக் கட்சிகள் யார் இருந்தாலும், இட ஒதுக்கீட்டினை பாதுகாப்பதில் எள்ளளவும் சமரசமின்றி செயல்பட்டுள்ளார்கள். அதிலும், குறிப்பாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை உத்தரவாதப் படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பில் உரிய பாதுகாப்பினையும் திராவிடக் கட்சிகள் தான் செய்துள்ளன என்பது வரலாறு.
திரைப்பட நடிகை கஸ்தூரி தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் அதிக லஞ்ச லாவனியம் பெற்று, அளவிற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர் என்றும், இவர்களால்தான் அரசுத்துறைகளில் மிக அதிகமான அளவில் ஊழல்கள் மலிந்துள்ளதாகவும், பொத்தாம் பொதுவாக, தரம்தாழ்ந்த ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை பொது வெளியில் தெரிவித்துள்ளார்.
தனியரின் தரக்குறைவான ஆதாரமற்ற இப்பேச்சிற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் அரசின் திட்டங்களை பொது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்திடும் பொருட்டு, இரவு பகல் பாராமலும், கண் துஞ்சாமலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணிபுரிந்து அரசுக்கு நற்பெயர் ஈட்டித்தரும் இவ்வேளையில், எங்கோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒருசில குறிப்பிட்ட பிரிவுகளைச் சார்ந்த அரசு அலுவலர்களின் பணியினை கொச்சைப்படுத்திடும் விதமாக எவ்வித அடிப்படை ஆதாரமின்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் தெரிவித்திருப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த விழைகிறார் என்றே கருதுகிறோம்.
தனியரது இம்மாதிரியான தரம்தாழ்ந்த பேச்சு மாநிலம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதியை நீண்ட நெடுங்காலமாக கடைபிடித்துவரும் தமிழ் மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். எனவே, குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் விதமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
எனக் கூறப்பட்டுள்ளது.