டில்லி

விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரில் சமூக வலை தளங்களில் உலவி வரும் பொய் தகவல்களை குறித்து அரசு எச்சரிக்கை அளித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டார். உலக நாடுகள் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதால் அவரை யாரும் காண முடியாத நிலை உள்ளது.

இன்று ராணுவத்துறையின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நாட்டின் எஃப் 16 ரக விமானம் நம்து நாட்டின் மிக் 21 விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சமூக வலை தளங்களில் பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது குறித்த விளக்கத்தை ஏற்கனவே கடந்த மாதம் 24 ஆம் தேதி இந்திய விமானப்படை அளித்துள்ளது. .

அத்துடன் விங் கமாண்டர் அபிநந்தன் பெயரில் கடந்த ஒரு வாரத்தில் சமூக வலை தளங்களில் பல கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை இன்று அபிநந்தன் பெயரில் அலுவல் தொடர்பான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைத் தளக் கணக்கும் கிடையாது என அறிவித்துள்ளது.

எனவே இவ்வாரு தொடங்கப் பட்டுள்ள கணக்குகள் போலியானவை எனவும் மக்கள் இந்த கணக்குகளை பின் பற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் படுகின்றனர். மேலும் இந்த கணக்குகள் சந்தேகத்துக்கு உரியவை “ என எச்சரித்துள்ளது..