டில்லி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக யாரிடமும் ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் என முதியோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.  முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு  தடுப்பூசி போடப்பட உள்ளது.  சென்ற வார இறுதி வரை மொத்தம் 15,37,190 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அடுத்த கட்டமாக முதியோருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட உள்ளது.

தற்போதுவரை முதியோருக்குத் தடுப்பூசி போடுவது எப்போது ஆரம்பிக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை.  அதே வேளையில் இணையம் மூலம் முதியோர் தங்கள் பெயரை தாங்களே பதிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதற்காக கோவின் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக ஓட்டுநர் உரிமம், பான் கார்ட், வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், வாக்காளர் அடையாள் அட்டை, உள்ளிட்ட பலவும் அடையாளத்துக்காக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல ஏமாற்று  பேர்வழிகள் முதியோரை ஏமாற்ற முனைந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.  இதையொட்டி மத்திய அரசு யாராவது கொரோனா தடுப்பூசி போட ஆதார் எண்ணைக் கேட்டு அதன் பிறகு ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வர்டை கேட்டால் தரக்கூடாது என எச்சரித்துள்ளது. அது மட்டுமின்றி யார் எந்த ஒரு சொந்த விவரத்தைக் கேட்டாலும் அளிக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளது.