டில்லி:

கொலிஜியம் பரிந்துரை செய்த மிக தகுதியுள்ள நீதிபதியை உச்சநீதிமன்றத்தில் நியமனம் செய்யவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது என்று முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார்.

‘தலைமை நீதிபதி முதல் அனைவரும் சமம்’ என்ற தலைப்பில் பி.ஜி.வர்க்கீஸ் நினைவு சொற்பொழிவு நடந்தது. இதில் டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசுகையில், ‘‘ கொலிஜியம் நடைமுறையில் இருந்து விலகி நீதிபதிகள் அவரவருக்கு என்று தனித்தனியாக நடைமுறையை கட்டமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் ஒதுக்கீடு முறையில் புணரமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்திய தலைமை நீதிபதி என்ற பதவி ஆலோசனை செயல்முறையாக இருக்க வேண்டும். தற்போதைய தலைமை நீதிபதி இந்த விவகாரங்களை கையில் எடுத்தால் மகிழ்ச்சி அளிக்கும். தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டது. இதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள செயல்முறைகள் ஒப்பந்தத்தை மறு சீரமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘செயல்முறைகள் ஒப்பந்தத்தை ஏன் இன்னும் இறுதி செய்யாமல் இருக்கிறீர்கள்? என்று நீதிபதி லுத்ரா மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். சமீபத்தில் பேட்டி அளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முடிவு செய்ததை, 2 நீதிபதிகள் அடங்கிய பெஞச் எப்படி விசாரிக்கலாம்? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்றத்தில் நியமனம் செய்வதை மத்திய அரசு தடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற அவருக்கு முழு தகுதி உள்ளது. செயல்முறை ஒப்பந்தம் என்பது தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு மிகவும் முக்கியமான சோதனையாக அமையவுள்ளது’’ என்றார்.