டெல்லி:
இந்தியாவில் விமான பயணத்தின்போது, பயணிகள் இணையதளம் உபயோகப்படுத்தும் வகையில், வைஃபை வசதி செய்ய கொடுத்த விமான நிறுவனங்களுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துவித தேவைகளுக்கும் இணையதளம் இன்றியமையாததாகி உள்ள நிலையில், விமானத்திலும் இணையதள சேவை வழங்கவும், உபயோகப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இந்தியாவில் இயங்கும் பயணிகள் விமானங்களில் வைஃபை வசதிகளைச் செய்துதர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக திருத்தப்பட்ட விமான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயணிகள் விமானத்தில் பயணிப்பவர்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விமானத்தின் பைலட்கள் இதனை அனுமதிக்கலாம்.
முன்னதாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லட், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஈ ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் வைபையைப் பயன்படுத்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கும் விமான ஓட்டியிடம் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத் தளத்தில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் விமான நிறுவனங்கள் வைஃபை சாதன வசதியைச் செய்து தரலாம்.
விமானத்தில் பயணிகள் பயணம் செய்யும்போது, மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், ஈ-ரீடர் அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான மின்னணு சாதனங்கள் பயன்பாடு ஆகியவற்றை ப்ளைட் மோட் அல்லது ஏரோபிளேன் மோடில் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்’.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.