டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சரியான விளக்கம் தர ஒரு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையில், கொரோனா நெருக்கடி காரணமாக, கடனாளர்களின் மாதாந்திர நிலுவைத் தொகை செலுத்துவதை நிறுத்தி வைக்கும் சலுகையை ஆகஸ்டு 31 வரை நீட்டிக்க, வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்து இருந்தது. ஆனால், ஆனால் இஎம்ஐக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் (அக்டோபர் 3ந்தேதி) நடைபெற்ற விசாரணையின்போது, ரூ.2 ஆயிரம் கோடி வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்து என்று மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் , வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் மற்றும் சிறு குறு, தொழில் கடன், கிரெட்டில் கார்டில் கடன் பெற்றவர்களுக்கான கடன் தொகையில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும், நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, வட்டி வசூல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அரசு பிரமாணப் பத்திரத்தில் பதில் இல்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், மத்திய அரசு சரியான பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரக் கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி அசோக் பூஷண், அரசு பிரமாணப் பத்திரம், வழக்கில் எழும் பல சிக்கல்களைக் கையாளவோ குறிப்பிடவோ இல்லை, அதற்கான பதிலும் இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களின் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான விரிவான பதிலை தாக்கல் செய்ய மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.