டில்லி:

மிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், தங்கள் அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர்.

பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு எதிராக இருந்தாலும், அவருக்கு பத்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது முதல்வர் எடப்பாடி அரசுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவர்களில் 10 பேர் தினகரனை ஆதரித்தால் எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்படும்.  அதே நேரம் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை ஆதரிப்பதன் மூலம் ஆட்சியைக் காப்பாற்ற முடயும் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது:

“ஜெயலலிதா மரணமடைந்ததில் இருந்தே தமிழகத்தில் தனது ஆட்டத்தை பாஜக துவங்கிவிட்டது. ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது, அவரை பின்னணியில் இருந்து இயக்கியது, சசிகலா முதல்வராக முயன்றபோது, அவருக்கு தண்டனை கிடைக்கும் வரை கவர்னரை காக்கவைத்தது, அமைச்சர் உள்ளிட்டோர் வீட்டில் வருமானவரி சோதனை, அதிமுக பெயரை இரு அணிகளும்  பயன்படுத்த தடை விதித்ததோடு இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு… என்று மிக நேர்த்தியாக பாஜக விளையாடிக்கொண்டிருக்கிறது.

அதே நேரம் ஆட்சியைக் கலைத்தால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற தயக்கம் பாஜகவுக்கு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களை பார்க்கும் மக்கள், “ஆட்சியைக் கலைப்பதே நல்லது” என்று கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சமூகவலைதளங்களிலும் பலர் இதே கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆகவே தமிழக ஆட்சியைக் கலைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இங்கு கவர்னர் ஆட்சியை கொண்டுவருவதன் மூலம் மறைமுக பாஜக ஆட்சியை ஏற்படுத்தலாம். அது தமிழகத்தில் கட்சி வளர உதவும் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். அதற்கேற்ப  தமிழகத்துக்கு தனி கவர்னரை நியமிக்கவும் தீர்மானித்திருக்கிறார்கள் ” என்று கூறப்படுகிறது.