ஜம்மு
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜேகேசஎன்பிபி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்.
ஜம்முவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக மாநில மக்கள் அமைதியின்றி உள்ளனர். எங்கு பார்த்தாலும் வன்முறையும், அராஜகமும் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அங்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீரும், மருந்துப் பொருள்களும் கூட கிடைப்பதில்லை. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருள்கள் வாங்குவதற்கு கூட மக்கள் வெளியேறுவதை பாதுகாப்புப் படையினர் தடுக்கின்றனர். இதனால் தற்போது மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
எனவே, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 92-ஆவது பிரிவைப் பயன்படுத்தி அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்பிபி) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் கலிஃபுல்லா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.