டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென கோரி அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென ஜனவரி 21ம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது. வழக்கு விசாரணை வரும் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டுமென தமிழக ஆளுநர் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், தமிழக ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 28 மாதங்களாக காலம் தாழ்த்தி அவர் முடிவு எடுத்திருப்பது அதிகாரத்தை தட்டிக்கழிப்பதாக இருக்கிறது. தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.