சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு’ என தனது உரையை முடித்துள்ளார். இது வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த மாதம், ’தமிழகம், தமிழ்நாடு’ என ஆளுநர் கிளப்பிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு என ஆளுநர் கூறி வருகிறார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய வாக்காளர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், தேர்தலை முறையாக நடத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளை தடுத்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட சேலம் , தர்மபுரி, தென்காசி, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 100% வாக்குப்பதிவு இலக்கை அடைய மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகின்றனர். அனைவரும் சேர்ந்து வாக்குப்பதிவு சதவீதத்தை 80% க்கு மேல் கொண்டு செல்வோம். வாக்கு சீட்டு முறையில் இருந்து முன்னேறி இ.வி.எம் இயந்திரங்கள் வந்துள்ளது.
கடந்த சில தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். பெண்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள் . தமிழகத்தில் 1.8 கோடி புது வாக்காளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை உள்ளது. அவர்களின் எண்ணங்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியவர்களை தேர்வு செய்வார்கள்.
இந்தியா முன்னேறி வரும் நாடாக இருக்கிறது. 2047-ம் ஆண்டில் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும். 18 வயது பூர்த்தி செய்யும் அனைவரும் தங்களின் கடமை என கருதி வாக்களிக்க வேண்டும்.
வாக்களிக்க உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள் கூறி, ‘வாழ்க தமிழ்நாடு’ ’’என ஆளுநர் தன் உரையை முடித்தார்.