சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு  வெளியேறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 6ந்தேதி) தொடங்கியது. முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதையேற்ற ஆளுநரும், இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்றம் வருகை தந்தார்.   தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதன் பிறகு சட்டசபை கூட்டம் தொடங்கியது.  அதில் பங்கேற்க வந்த கவர்னருக்கு,  காங்கிரஸ், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ., உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.  மேலும், சபையில், தேசியகீதம் பாட துவங்கியதும், அதை மதிக்காமல் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் கவர்னர் அதிருப்தி அடைந்து சபையில் கவர்னர் வெளியேறினார். தொடர்ந்து கவர்னர் படிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

ஆளுநர் உரையாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு, அதை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில்  அவையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே   கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றி னார். ‘கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது’ என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.