சென்னை: தவெக அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று நடைபெற்றது. தவெக காங்கிரஸ் உள்பட 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்முலம் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு மலர்ந்துள்ளது.
சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியது. முதலில் வந்தேமாதரம், இரண்டாவது தேசிய கீதம், 3வது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பதவி ஏற்பு விழாவானது முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். . கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் முதலைச்சர் முன்னிலையில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழகத்தில் த.வெ.க அரசு பதவியேற்ற 10 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப் பேரவை உருவானது. 108 இடங்கள் த.வெ.கவும், 59 இடங்கள் தி.மு.க, 47 இடங்கள் அ.தி.மு.க. பிடித்திருந்தன. இதையடுத்து அதிக இடங்களை பெற்ற தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், பெரும்பான்மைக்கான பட்டியலை ஆளுநர் கேட்டதால் பதவி ஏற்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினமே, 5 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகால திமுக உடனான நட்பை முறித்துக் கொண்டு , த.வெ.க கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளித்தது. அதேவளையில், தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கின. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவையும் ஆதரவு அளித்தன.

இதையடுத்தே பெரும்பான்மைக்கான ஆதரவு மூலம், மே 10ம் தேதி விஜய்யும், அவரது அமைச்சரவை சகாக்கள் 9 பேரும் பதவியேற்றனர். மே 13-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு தரப்பு ஆதரவு வழங்கியதால், 144 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் த.வெ.க அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு வழங்க தவெக அழைப்பு விடுத்தது.அதன்படி, இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் த.வெ.க சார்பில் 21 எம்.எல்.ஏ-க்களும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் தொகுதி எம்எல்ஏவான பெ. விஸ்வநாதன் ஆகிய இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதுவரை முதல்வர் விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் உள்ள நிலையில், இன்று த.வெ.க-வின் 21 எம்எல்ஏ-க்களும், காங்கிரஸின் 2 எம்எல்ஏ-க்களும் பதவியேற்பதன் மூலம் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை மலர்ந்துள்ளது.
இதற்கிடையில், திமுக கூட்டணி கட்சியான ஐ.யு.எம்.எல் மற்றும் விசிகவும் தவெகவுக்கு ஆதரவு வழங்கி உள்ளதால், இந்த கட்சிகளி சார்பில் தலா ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்தமுள்ள 33 அமைச்சர்களில் 7 மாவட்டங்களில் இருந்து மட்டும் 20 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் இருந்து 7 அமைச்சர்களும், நாமக்கல்லில் இருந்து 3 அமைச்சர்களும் , கோவை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தலா 2 அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.
