சென்னை: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டுத் தெரிவித்தார்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் பன்வாரிலால், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக அயராது உழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார். மேலும, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நம் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, பல்வேறு இன்னல்களை தாங்கிக்கொண்ட தியாகிகளுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துகிறேன்.
செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்புபாராட்டும் மக்களின் உறைவிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் இம்மாநிலம் பெற்றுள்ளது. மாநில அரசின் அயராத முயற்சிகள் காரணமாக, தமிழ்நாடு பல துறைகளில் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நீங்கள் அனைவரும் முழு வெளிப்படைத்தன்மையுடன், கடினமாக உழைக்க வேண்டும். மக்களுக்கு ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரின் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க, ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, அரசு தலைமைச் செயலர் வி.இறையன்பு, ஆளு நரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.