புதுவை போன்ற பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களே அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்
தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. புதுவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பத்திரிகையாளர்களை அவமதிக்கும்படியாக தரக்குறைவான பதிவினை முகநூலில் வெளியிட்ட எஸ்.வி. சேகர் மீது வழக்கு தொடர்ந்தும் அவரை இன்னும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. அவரை கைது செய்யாததற்கு யாரோ அழுத்தம் கொடுப்பது தான் காரணம்.

தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதை தடுக்கும் சக்தியுடன் மத்திய அரசு இல்லை.

புதுவை போன்ற பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களே அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள். தமிழகத்தில் கூட ஆளுநர் ஆய்வு என்ற பெயரில் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

ஆளுநரின் அதிகார மீறல்களுக்கு வழிகாட்டியாக புதுவை கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கவர்னரின் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கனிமொழி கூறினார்