சென்னை

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடுக்க ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சில கருத்துக்கள் மேடையில் பேசப்பட்டதாகவும், அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்ததாகவும், அதன் பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை கூறி இருந்தார்.

இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் என்பவர் இரு பிரிவினர் இடையே பதற்றம் உண்டாக்குவது, பொய்யான தகவல்களை மக்களிடம் சேர்ப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து இருந்தார்.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்ட தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.  ஏற்கெனவே சேலத்தில் இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.