சென்னை: அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி என்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற 36 தமிழக மாணவர்களுக்கு முதல்வர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. சமூக நீதியை கடைப்பிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்திய இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான 36 பேரில் 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள். மேலும், மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் இதில் தேர்வாகியிருப்பது எனக்கு மிகவும் தேனிலும் இனிமையான செய்தியாக இருந்தது.
அரசுப் பணி என்பது, தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி என்றும், அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அதிகாரிகளுக்கு உள்ளது. இந்திய அளவில் உயர் பதவியில் இருக்கும்போது பிறந்த மண்ணையும் தாய்மொழியையும் மறக்கக்கூடாது. அரசு வசதிகளை சிதைக்க நினைக்காமல் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்றவேண்டும். பிரச்சினையை கண்டு பயந்து ஓடாமல் எங்கிருந்து கிளம்பியது என்று ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.