சென்னை

மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான நாப்கின் தயாரிப்பு பணி தடைப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே மத்திய அரசு உதவ வேண்டும் என முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முருகானந்தம் மிக எளிய முறையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் நாப்கின்களை மலிவு விலையில் நாடு  முழுதும் வழங்கி வருகிறார். ஜெய்ஸ்ரீ எனும் பெயர் கொண்ட அத்தயாரிப்புப் பணியில் பல பெண்கள் குழுக்கள் பயிற்சி பெற்று வருகின்றன.

இது குறித்து முருகானந்தம், “இது மிகவும் நெருக்கடியான சூழல் என்றாலும் பெண்களின் நலம் மிகவும் முக்கியம். மலிவு விலை நாப்பின்கள் இல்லையெனில் பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமற்ற தடுப்பு முறைகளை மேற்கொள்வர். பல மகளிர் குழுக்கள் எங்களை தொடர்பு கொண்டு நாப்கின்களை கேட்டு வருகின்றனர்.

நாப்கின் தயாரிப்பு பொருட்களுக்கு தற்போதைய ஊரடங்குச் சூழலில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது நெருக்கடி நிலை என்றாலும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம். எனவே மத்திய அரசு இதில் உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

மலிவு விலை நாப்கின் சேவையால் முருகானந்தம்  Padman என போற்றப்படுகிறார். இவரின் வாழ்க்கை இந்தியில் அக்ஷய்குமார் நடிக்க  Padman என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இவரின் சமூக செயல்பாடு Period –  last sentence என ஆவணப் படமாக்கப்பட்டு சென்ற ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றது. மத்திய அரசும் இவரின் சேவையை பாராட்டும் விதமாக பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.