சென்னை:

டந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்து உள்ளனர்.  வேலை நிறுத்தம் தற்காலிகமாக  வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 25ந்தேதி முதல்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்கள் நோயாளிகள் கடும் பாதிப்பு உள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அமைச்சசர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அரசு மருத்துவர் சங்ககளில் சில பிரிவினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பணிக்கு திரும்பினர். ஆனால், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு பிடிவாதமாக போராட்டத்தை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதற்கான கால அவகாசம் இன்று காலை வரை நீட்டிக்க பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் பணிக்கு திரும்பியவர்களை தடுத்ததாக புகார் எழுந்த 500 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவித்தது.

அதுபோல, நேற்று சேலத்தில் பேசிய முதல்வரும், மக்களுக்காகத்தான் மருத்துவர்கள் என்றும், அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களது பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கும் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், எளிதில் சரி செய்யக் கூடிய தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டால், போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.