புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச எல்லைகளை இணைக்கும் பகுதி அல்லது எல்லை கோட்டுப் பகுதிகளில் இந்த தளர்வுகள் வழங்கப்படாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலேயே 4ஜி இணைய சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்பு, அரசு அங்குள்ள சூழ்நிலை குறித்து மறுஆய்வு செய்யும் எனவும் தெரவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டு ஒருவருடத்தை கடந்துவிட்ட நிலையில், அப்போதிலிருந்து அதிவேக இணைய சேவைக்கு தற்போது வரை அங்கு தடை நீடிக்கிறது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமையன்று 4ஜி சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், யூனியன் பிரதேசத்தில் புதிதாக துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதால் அதிவேக இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு மேலும் அவகாசம் கோரியுள்ளது.
துணை நிலை ஆளுநராக இருந்த முர்மு ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணைய சேவையை வழங்குவதற்கு முர்மு தலைமையிலான நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், சர்ச்சையை சந்தித்து வந்தது. தொடர்ந்து, இணைய சேவையை மீண்டும் வழங்குவதற்கு பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து வருவதாக அவரது நிர்வாகம் காரணம் கூறி வந்தது.