புதுடெல்லி:

ஜெட் ஏர்வேஸுக்கு வழங்கப்பட்ட 440 சேவைகளை மற்ற விமான நிறுவனங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.


ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடி காரணமாக தமது சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது.
இதனால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் சேவைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று போட்டி விமான சேவை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து செயலர் பிரதீப் சிங், ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டதால், அதன் 440 சேவைகள் காலியாக உள்ளன.

மும்பையிலிருந்து இயக்கப்படும் 280 சேவையும், டெல்லியிலிருந்து இயக்கப்படும் 160 சேவையும் காலியாக உள்ளன.

இந்த சேவைகள் 3 மாதங்களுக்கு மற்ற விமான சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும்.

அடுத்த 3 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் மூலம் புதிதாக இயக்கப்படும் என்றார்.