சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளிகளில் கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 13ம் தேதி  அன்று  1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை  தொடங்கும் என்று  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ந்தேதி மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  வரும் கல்வியாண்டில்  1, 6, 9, 11ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  இடைப்பட்ட வகுப்புக்கான 2 ,3 ,4, 7, 8, 10 ஆகிய வற்றுக்கும் ஜூன் 13ஆம் தேதி சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காலக்கட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அலைமோதியது. பல தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் ஏராளமானோர் அரசு பள்ளிகளை நாடினர். தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில்,  மீண்டும் ஏராளமான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச்சென்றுள்ளனர். இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில்  தாமதமாக சேர்க்கையை தொடங்குவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை குறையும் என கல்வி ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.