சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டு காலம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளி கல்வி ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை  59ல் இருந்து 60ஆக உயர்த்திது. ஒய்வூதியம், பணிப்பலன்  கொடுக்கும் அளவுக்கு  நிதிநிலை இல்லை என்பதால்,  ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது. இதனால் பல லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினரின் பணி வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில், தற்போது ஆசிரியர் நியமன வயதை மேலும் 5 ஆண்டுகாலம் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டும்,  ஆசிரியர்கள் நியமனத்துக்கான வயது வரம்பு  35ல் இருந்து 40 ஆக உயர்த்தி  பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி உள்ளது. அதன்படி,   ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தற்போதைய கல்விமுறையை போதிக்கக்கூடிய தகுதிகூட இல்லாமலும், பணியாற்றுவதற்கான உடல் தகுதி இல்லாமலும் இருக்கும் நிலையில், தமிழகஅரசு அவர்களுக்கே சலுகைகளை வாரி வழங்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.