சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களை நிவர் புயல் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகஅரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது. இதையொட்டி இன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுவை பிறப்பிக்கலாம் என  வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. நிவர்  புயல் தற்போது  310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 370 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் 6 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.   அடுத்த 6 மணி நேரத்திற்கு மேற்கு, வடமேற்கில் நகர்ந்து அதன்பின் வடமேற்கில் நகரும் என்றும்,  காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் அதீத தீவிர புயலாக இன்றிரவு கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 130 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

தீவிர புயல் காரணமாக சென்னை, தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக  தமிழகம், புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்பட புயல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் உள்ள  டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக, சூழ்நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுவை கடைபிடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.