டெல்லி: இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காவிரி பிரச்சினையை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1-ம்தேதி அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுள்ளனர். இதன் தலைவராக எஸ்.கே. ஹல்தர் இருந்து வருகிறார். இவரது தலைமையில் காவிரிஆணைய கூட்டம் நடைபெற்று, தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் திறந்து விட உத்தரவிடப் படும்.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 11ந்தேதி) பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவிரி நீர் நீர் புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கர்நாடக அரசு தரப்பில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை ஏற்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்க அரசு வலியுறுத்தியது.