சென்னை: ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதிகளில், பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டம் துவங்கப்படும்’ என, 1998ல் மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட, 13 கிராமங்களைச் சேர்ந்த, 1,100 விவசாயிகளுக்கு சொந்தமான, 7,400 ஏக்கர் நிலமும், 3,000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் 20 ஆண்டுகளை கடந்தும் அது செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாமலும் உள்ளது.

தேர்தல் வரும் போதெல்லாம், ‘ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பேசி வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.  அல்லது, ‘கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க, நடவடிக்கை எடுப்பேன்’ என, வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுப்பதும், ஜெயித்த பின், அதை மறப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போதைய  ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.