சென்னை: தமிழ்நாட்டில், 100 அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பசுமை பள்ளி திட்டம் என்பது, இது ஒரு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பாகும், இது மாணவர்களின் மூலம், பள்ளி வளாகங்களில் உள்ள இயற்கை வளங்களின் நுகர்வு மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது. இதை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 500 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின்மூலம், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலமாக மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, காய்கறி தோட்டம் உருவாக்குவது, நீர் பயன்பாட்டை குறைப்பது, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்படும் என்றார். அதைத்தொடர்ந்து, கடந்த 2022-23ம் நிதி 25 அரசு பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து, 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் மேலும், 100 பள்ளிகளுக்கு பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது அரசாணை வெளியாகி உள்ளது.
அதன்படி, 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்த தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.