சென்னை: தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள  நிலையில், அதுகுறித்து தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு அரசு பள்ளிகளில் கற்றல் தரத்தை மேம்படுத்தவும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். எற்கனவே அங்கன்வாடி மையங்களில் சரியான முறையில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்படாததால், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகஅரசு, வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி நிறுத்தப்படுவதாக அறிவித்தது. மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக அங்கன்வாடிகள்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை எடுத்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

1 முதல் 5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும்,  மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தொடக்கப்பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்தவுமே ஆசிரியர்கள் மாற்றப்பட்டதாகவும், அங்கன்வாடிகளில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

அரசு தொடக்கப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை உள்ளதாலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதாலும், ஏற்கனவே 4,853 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும் எல்கேஜி, யுகேஜி வகுப்பெடுத்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களுக்கு மழலையர் வகுப்புகளை கையாள்வதில் சிக்கல் இருந்ததால் அவர்கள் மாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.