சென்னை:
பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து, முழு கரும்பு ஒன்றும் சேர்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பாக அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் கடந்த திங்கள் முதல் முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்டுப்பாடுகள் காரணமாக பல பகுதிகளில் பைகள் தைக்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.