அமிர்தசரஸ்:

புல்வாமா பயங்கரவாத  தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின்  குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவித்து உள்ளார்.

கடந்த 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம்  அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை பயங்கரவாதி  குண்டு நிரப்பிய காருடன் வந்து மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த கொடூர வெடிவிபத்தில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்து உள்ளது. மேலும் பல வீரர்கள்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறி வருகின்றனர். நாடு முழுவதும் பல இடங்களில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலஅரசும், பலியான சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிதிகளை வழங்கி உள்ளது. . தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக  திரையுலக பிரபலமான அமிதாப்பச்சன், ரிலையன்ஸ் குழுமம் உள்பட ஏராளமானோர், பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும், அவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்க முன்வந்துள்ளனர்.

இந்த கொடூர குண்டுவெடிப்பில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 4 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பலியான வீரர்களின் குடும்பத்துக்கு  மாநில அரசின் சார்பில் 7 லட்சம் ரூபாய் கருணைத்தொகையும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   குண்டுவெடிப்பில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் இல்லத்துக்கு பஞ்சாப் மாநில முதல் மந்திரி  அமரிந்தர் சிங் சென்றார். அங்கு அவர்களுடன் தரையில் அமர்ந்து,  அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்றைய சந்திப்புக்கு பின்னர் குல்விந்தர் சிங்கின் வாரிசு (மனைவி அல்லது பெற்றோர் இறக்கும்வரை) அவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

மேலும், அனந்த்புர் சாஹிப் நகரில் இருந்து குல்விந்தர் சிங் வாழ்ந்த கிராமத்தை இணைக்கும் சாலைக்கு அவரது நினைவாக குல்விந்தர் சிங் சாலை என பெயரிடப்படும் எனவும், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.