சென்னை,
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அரசு எஸ்எம்எஸ் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடை பெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்தும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பதவி நீக்கலாம் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், ஏற்கனவே வேலை நீக்கம் குறித்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும், வேலை நிறுத்ததில் ஈடுபடுபவர்களுக்கு விளக்கம் கேட்காமல் பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு மொபைல் போன்களுக்கு குருஞ்செயலி (எஸ்எம்எஸ்) மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
மதுரையில் 4500 பேர், திருவண்ணாமலையில் 1700 பேர், கோவை மண்டலத்தில் 11,819 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
இது ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.