பாட்னா:

பிரபல கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் மறைந்த நிலையில், அவரது உடலை எடுத்துச்செல்ல மாநில அரசோ, அரசு மருத்துவமனை நிர்வாகமோ ஆம்புலன்ஸ் வழங்ககாததால், அவரது உடல் ஸ்டெக்ச்சருடன் சாலையோரம் வைக்கப்பட்டது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாட்டின் பிரபலமான  கணித மேதை ஒருவருக்கே இந்த நிலையில் என்றால், சாமானிய மனிதனின் நிலை அங்கே எப்படி இருக்கும்?

பிரபல கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங் (74) நீண்ட காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த நிலையில், பிகாரில் வியாழக்கிழமை காலமானாா்.   போஜ்பூா் மாவட்டம், பசந்த்பூா் கிராமத்தில் பிறந்த வசிஷ்ட நாராயண், கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். கான்பூரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்திலும், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்திலும் பேராசிரியராக பணியாற்றி யுள்ளாா்.

வசிஷ்ட நாராயண் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி பீகார் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நிதிஷ்குமார் வெளியிட்ட இரங்கல், ‘வசிஷ்ட நாராயண் மறைவு, பிகாருக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இறந்த அவரது உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துச்செல்ல அவரது அரசோ, அரசு மருத்துவ மனை நிர்வாகமோ எந்தவொரு உதவியும் செய்ய முன்வரவில்லை.  மறைந்த வசிஷ்ட நாராயண் சிங் உடலை அவரது நண்பர் ஒருவர் ஸ்டெக்ச்சர் மூலம் எடுத்து வந்து, மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்சுக்காக வெகுநேரம் காத்திருக்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கூறிய மாநில அரசு, மறைந்த அவரது உடலை எடுத்துச் செல்லக்கூட உதவி செய்யாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.