டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.
18வது மக்களைக்கான தேர்தல் காரணமாக, நடப்பு ( 2024-25) நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து, மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஜூலை 21ந்தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 21-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனிநபர் வருமான வரி தொடர்பாக புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அதற்கான திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.