சென்னை:
வரும் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். ஊதிய ஒப்பந்தமானது போக்குவரத்து கழக நிர்வாகம், தமிழக அரசு, போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் போடப்படும்.
12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு மாதத்துடன் முடிந்துவிட்டது. 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7ம்ந் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நடைபெற்றது.
ஆனால், இதில் பங்கேற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 28-ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பேச்சுவார்த்தை தள்ளிப் போனது.
இந்த நிலையில், 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று ) மீண்டும் குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நடைபெற்றது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 52 தொழிற்சங்கங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 9ம் தேதி வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.