திருவண்ணாமலை:

அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பஸ்களில், முன்னறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இரு மடங்கு கட்டண உயர்வை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு திடீரென அறிவித்தது.

டீசல் விலையேற்றம், பராமரிப்பு செலவு காரணமாக இந்த கட்டண உயர்வு என தெரிவித்தது. அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், சமீபத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, டவுன் பஸ்களில் ஒரு ஸ்டேஜுக்கு, ரூ. 7 என்பதை ரூ. 8 ஆகவும், ரூ. 10 என்பதை ரூ. 11 ஆகவும் உயர்த்தியுள்ளனர். டவுன் பஸ்களில் அதிகபட்ச கட்டணம் ரூ. 18-லிருந்து ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேலம்-காஞ்சிபுரம் இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளில், செய்யாறு-திருவண்ணாமலைக்கு ரூ.86 என்று இருந்த கட்டணம், ரூ.96ஆகவும், திருவண்ணாமலை-செங்கத்திற்கு, ரூ.30 என்று இருந்த கட்டணம் ரூ32 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல், பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், சாதாரண பஸ், டீலக்ஸ் பஸ், எக்ஸ்பிரஸ், 1 டூ 5, அல்ட்ரா டீலக்ஸ் என அரசு பஸ்களின் பெயர்களை மாற்றி, ஒவ்வொரு பஸ்சுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எந்த பஸ்சில், என்ன கட்டணம் என தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, பஸ் கட்டணத்தை பழையபடி மாற்றி அமைக்காவிட்டால், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

திடீர் பஸ் கட்டண உயர்வால் பஸ் கண்டக்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களை மையமாக வைத்தே அடிக்கடி கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவதை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.