சென்னை: நீட் தற்கொலை போன்று, தமிழகத்தில் தற்கொலைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கண்டனம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கடந்த 13ந்தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்தும் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு பயம் காரணமாக 4 பேர் தற்கொலை முடிவை நாடினர். இது தமிழக்ததில் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து, தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் முறையிட்டார்.
நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க 2 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும், ஊடகங்களும் உரிய கவனத்துடன் செயல்படவேண்டும், இதுபோன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்கும் வகை யில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று கருதினால் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
தற்கொலை விவகாரத்தில், சாவு வீட்டிற்கு சென்று அரசியல் கட்சிகள் பண உதவி வழங்குவதும், அரசு வேலை தர வலியுறுத்துவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் அவலம் என்பது குறிப்பிடத்தக்கது.