கொழும்பு

லங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபாய ராஜபக்சே போட்டி இட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதிருந்தே இந்த தேர்தலில் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தரப்பில் இருந்து நிறுத்தப்பட உள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து பலவித யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளி வரவில்லை.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத அரசியல் தலைவர் ஒருவர், “ராஜபக்சேவின் குடும்ப உறுப்பினர்கள் சமீபத்தில் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்தில் கூடிப் பேசி உள்ளனர். அவர் இல்லத்தில் நட்ந்த விருந்து ஒன்றில் இந்த ஆலோசனை நடந்துள்ளது.

அப்போது மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்பு செயலருமான கொத்தபாய ராஜபக்சேவை அதிபர் தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடக்க இன்னும் காலம் உள்ளதால் இந்த முடிவை மகிந்த ராஜபக்சே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.  இது குறித்து ராஜபக்சே குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

அதே நேரத்தில் கொத்தபாய ராஜபக்சே தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை  ரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மற்றொரு நாட்டின் குடியுரிமை இருக்கக் கூடாது என்பதாகும்.