புதுடெல்லி:
குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத் திட்டம் மோடியின் உரையை கேட்டபின் தான் உதித்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நடந்த பேரணியில் பேசிய ராகுல்காந்தி, “கடந்த தேர்தலின் போது கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று தெரிவித்தார்.
அவரது உரையை நான் உற்றுக் கவனித்தேன். அவர் 3 முறை அதனை சொன்னார். அப்போதுதான் எனக்கு குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் உதித்தது.
அவரது யோசனை சரி என்று பட்டது.
அந்த பணம் ஏழை மக்களின் வங்கிக் கணக்குக்குப் போக வேண்டும் என நினைத்தேன். எங்கள் கட்சித் தலைவர்களுடன் 6 மாதங்களாக ஆலோசித்து ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் டெபாசிட் செய்வோம் என்று அறிவித்தோம்” என்றார்.
இந்த திட்டம் பிரதமர் மோடியை அசைத்துப் பார்க்கும் அளவக்கு சக்தி வாய்ந்தது என்று ராகுல்காந்தி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் 5 கோடி குடும்பங்களும், 25 கோடி தனி நபர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த திட்டம் வெற்றுத் திட்டம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடக்காத ஒன்றை தேர்தல் வாக்குறுதியாக கூறுகின்றனர் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.