வாஷிங்டன்:
40 மொழிகளின் உரையாடலை உடனடியாக மொழியாக்கம் செய்யும் ஹெட்போனை கூகுல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
கூகுல் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதிய வகை ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ‘‘கூகுல் பிக்சட் பட்ஸ்’’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் ஆப்பிள் ஏர்போட்ஸ் ஹெட்போனில் இருக்கும் அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும். ஆனால் ஆப்பிள் ஹெட்போனில் இல்லாத வகையில் 40 மொழிகளின் உரையாடலை உடனடியாக மொழியாக்கம் செய்து ஒலிக்கச் செய்யும் சிறப்பு வசதி இதில் இடம்பெற்றுள்ளது.
உதாரணமாக ஸ்பானிஷ் மொழியில் ஒரு நபர் சத்தமாக பேசினால், இந்த ஹெட்போனை பயன்படுத்துவோர் அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய் என உத்தரவிட்டால், உடனடியாக அவரது பேச்சு ஆங்கிலத்தில் கேட்க தொடங்கிவிடும்.
இது தொடங்கியவுடன் வலது காதில் இருக்கும் ஸ்பீக்கரை எடுத்து பேசுபவரின் எதிரே நீட்டினால் அவரது பேச்சு ஒன்று அல்லது இரண்டு விநாடிகளில் தொடர்ந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டே இருக்கும்.
கூட்டத்தில், இதை செயல்படுத்திக் காட்டியபோது அரங்கம் முழுவதும் பலத்த கரகோஷம் எழும்பியது. இதன் விலை 159 டாலர். ஆப்பிள் நிறுவனத்தின் ஹெட்போனும் இதே விலையில் கிடைக்கிறது. இதை இணைப்பு ஓயர் இல்லாமல் ப்ளூ டூத்திலும் பயன்படுத்தலாம். இணைப்பு ஓயரில் எவ்வித சுவிட்ச் பட்டனும் இருக்காது.
அனைத்து செயல்பாடுகளும் ஸ்மார்ட் போன் மூலமே மேற்கொள்ள முடியும். சார்ஜ் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் கூகுல் இணையத்தின் ப்ளாக் ஸ்பாட் தளத்தில் 24 மணி நேரமும் சார்ஜ் இன்றி இந்த ஹெட்போனில் பாடல்களை கேட்க முடியும். இது வரும் நவம்பரில் விற்பனைக்கு வருகிறது.