டில்லி
புத்தகங்களைப் படிக்க விடாமல் கூகுள் நம்மைக் கெடுப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி மனதின் குரல் (மன் கி பாத்) என்னும் வானொலி நிகழ்வில் நேரலையாக கலந்துக் கொள்கிறார். அப்போது அவரிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் உரையாடுகின்றனர். நேற்று இந்த நிகழ்வின் 59 ஆம் பகுதி நேரலையாக நடந்தது. இதில் தேசிய மாணவர் படையைச் (என் சி சி) சேர்ந்த மாணவர்களுடன் மோடி உரையாடினார்.
அப்போது அரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியைச் சேர்ந்த மாணவர் அகில் என்பவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் பிரதமர் மோடியிடம், அவருக்கு தற்போதுள்ள பரபரப்பான நிலையில் புத்தகங்கள் படிக்கவும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளையும் காண நேரம் உள்ளதா எனவும் அவருக்குப் பிடித்த புத்தகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வு குறித்தும் கேட்டார்.
இதற்கு மோடி, “எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் இல்லை. நான் வழக்கமாகத் தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை. இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு டிஸ்கவர் சேனால் நிகழ்வுகளைப் பார்த்துள்ளேன். கூகுள் மூலம் நாம் எதையும் உடனடியாக தெரிந்துக் கொள்ள முடியும் என்பதால் தற்போது புத்தகங்களையும் அதிகம் படிக்க முடியாதபடி நம்மைக் கூகுள் கெடுத்து விட்டது.” என பதில் அளித்துள்ளார்.