கலிபோர்னியா
மொத்த வீடியோ அழைப்புக்களுக்குப் பயன்படுத்தப்படும் ஜூம் செயலியை அலுவலக கணினியில் பயன்படுத்த கூகுள் தனது ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது.
ஜூம் செயலி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவருடன் வீடியோ மற்றும் வீடியோ இல்லாத அழைப்புக்கள் கணினி மூலம் நடத்தப் பயன்படுத்தும் செயலி ஆகும். இதைப் பல அலுவலகங்களின் கணினிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தற்போது அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்வதால் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது ஜூம் குண்டு வெடிப்பு என்னும் பெயரில் ஒரு புது மோசடி குறித்த தகவல் வந்துள்ளது. விவரங்கள் திருடுபவர்கள் இந்த செயலி மூலம் கணினியில் உட்புகுந்து அதிலுள்ள பல விவரங்களைத் திருடியதே ஜூம் குண்டு வெடிப்பு ஆகும்.
இதையொட்டி கடந்த வாரம் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய இ மெயிலில் தங்கள் அலுவலக கணினியில் உள்ள ஜூம் செயலியை உடனடியாக எடுத்து விட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. தற்போது அலுவலக கணினியில் உள்ள ஜூம் செயலியை அறவே பயன்படுத்தத் தடை விதித்து தங்கள் ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவில் கூகுள் நிர்வாகம்,”நாங்கள் வெகு நாட்களாக அனுமதி அளிக்கப்படாத செயலிகளை எங்கள் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்னும் கொள்கையில் உள்ளோம். சமீபத்தில் எங்கள் பாதுகாப்புக்குழு ஜூம் செயலி எங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப இல்லாததை எங்கள் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
எனவே எங்கள் அலுவலக கணினியில் எங்கள் ஊழியர்கள் ஜூம் செயலியை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஊழியர்கள் பயன்படுத்த விரும்பினால் அவர்கள் தங்கள் மொபைல் அல்லது மற்றொரு வெப் பரவுசர் மூலம் பயன்படுத்தலாம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஜூம் செயலிக்குப் போட்டியாக மற்றொரு வீடியோ காணொளி செயலியான மீட் என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.