டில்லி:

நாடு முழுவதும் வறுமையில் வாடும் 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என மத்திய அரசு பாராளு மன்றத்தில் அறிவித்து உள்ளது.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (20ந்தேத) நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிட்டார். அதில்,  60 வயது கடந்த விவசாயிகள்  மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்க  புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்த விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 60 வயதை கடந்த தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் 3ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வரையிலான விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், இத்திட்டத்தில் 29 வயதான ஒரு விவசாயி சேருகிற போது மாதம் 100 ரூபாயை செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசு செலுத்தும் என்றும்  இந்த ஓய்வூதிய திட்டம், எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தன்படி முதல் மூன்று ஆண்டுகளில், 5 கோடி விவசாயிகளை சேர்க்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக , அரசுக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 775 கோடி ரூபாய்  கூடுதல் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மாநில அமைச்சர்களை, தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜகவின் விவசாயிகளின் ஓய்வூதிய திட்டம் விவசாய பெருமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.