சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே  தெரிவித்து உள்ளது.

சென்னை மக்கள் மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்து சேவையில் பல ஆண்டுகளாக  சேவையாற்றி வருவது  சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்.  சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை  மட்டுமின்றி, தற்போது மெட்ரோ ரயிலும் கைகொடத்து வருகிறது. இருந்தாலும் புறநகர் பகுதி மக்களின் விடிவெள்ளியாக இருப்பது மின்சார ரயில் மட்டுமே. இந்த மின்சார ரயில்கள் மூலம் தினசரி பல லட்சம் பேர் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியாக ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், அதை நிறைவேற்ற கடந்த ஆண்டு (2024)  இரண்டு மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது.

12 பெட்டிகளைக்கொண்ட இந்த ஏசி ரயில்கள் தயாரிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில்,  ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலானது கடற்கரை – செங்கல்பட்டு இடையே விரைவு ரயில் (FAST) தடத்தில் இரு சேவைகள், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவை இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஏசி மின்சா ரயில் புறப்படும் நேரம்:

முதலில் இந்த ஏசி மின்சா ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கும் சென்றடையும்.

அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டும் செல்லும்.

இதேபோன்று மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் செல்லும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.