டில்லி:

உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்வரும் வரும் விழா காலங்களில் தங்கம் கொள்முதல் அளவு அதிகரிக்கும். தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரி மற்றும் விற்பனையின் வெளிப்படைத்தன்மை விதிமுளைகளில் இருந்து நுகர்வோர் தப்பிக்க வழிகளை தேடிக் கொண்டுள்ளனர்.

50 ஆயரம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் முதல் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி, தசரா போன்ற பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வந்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் தங்கம் வாங்குவோருக்கு மத்திய அரசு விதித்த நடைமுறைகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை. வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பில் இல்லாமல் நகை வாங்குவதையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தங்கத்தின் மீதான வரி 1.2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தங்கம் விற்பனை சட்டவிரோதமாக கணக்கில் வராமல் விற்பனை செய்யப்படுகிறது. தனிப்பட்ட தகவல்களை அளிக்க மக்கள் மறுத்து முறையான ரசீது இல்லாமல் தங்கத்தை வாங்கி செல்கின்றனர். அதனால் நகை வியாபாரிகள் கடத்தல் தங்கத்தை தள்ளுபடி விலையில் வாங்குகின்றனர். அவ்வாறு பெறப்படும் தங்கத்தை கொண்டு நகைகளை செய்து ரசீது இல்லாத விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் 4 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வருமான வரி செலுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் சட்டவிரோத வருமானத்தை தங்கத்தில் முடக்குகின்றனர். ‘‘புதிய விதிமுறைகள் நம்பிக்கைகளை காயப்படுத்தியுள்ளது. தசரா விழா காலத்தில் மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குவார்கள். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது’’ என்று ஒரு நகை வியாபாரி தெரிவித்தார். 2017ம் ஆண்டில் தங்கத்தின் விலை 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.