தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது ‘கோஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு (CEIB) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்துடன் பிடிபட்ட நடிகை ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து ரூ. 12.5 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ரன்யா ராவ் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி தொடர்ந்து மனு செய்து வந்தனர்.

இந்த நிலையில் அந்நிய செலாவணி கட்டுப்பாடு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (COFEPOSA) பிரிவு 3(1) இன் கீழ், CEIB இணைச் செயலாளர் அனுபம் பிரகாஷ் ஏப்ரல் 22 அன்று ரன்யாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தார்.

கோஃபிபோசா வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே காவலில் உள்ள நடிகை ரன்யாவை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்குமாறு அனுபம் பிரகாஷ் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். உத்தரவின் நகல் ரன்யா ராவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் மற்றும் பிற கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA)-ன் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.

COFEPOSA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மிகக் கடுமையான வழக்குகளில், சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.