மும்பை: நடப்பு நிதியாண்டிற்கான தங்க சேமிப்புப் பத்திரங்கள், மத்திய அரசின் சார்பில் 6 கட்டங்களாக வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி .
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது; நடப்பு நிதியாண்டிற்கான தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசு, 6 கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தப் பத்திர வெளியீடுகள், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதற்கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு இம்மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்டதுதான் இந்த தங்க சேமிப்பு பத்திரத் திட்டம்.
இத்திட்டத்தில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.