சேலம்:
ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன்.
1-mari
அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளார். மத்திய விளையாட்டு அமைச்சகம் 75 லட்சம் பரிசு அறிவித்து உள்ளது.
தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி தமிழகம் திரும்புவதாகவும்,  மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்கு நிதியுதவி செய்ய மாரியப்பன்  முடிவு செய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு சேலம் அருகே உள்ள  பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனின் திறமையை அறிந்து அவருக்கு  பயிற்சி அளித்தவர் அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்.
அவர் கூறியதாவது:  இந்த மாதம்  22ந் தேதி மாரியப்பன் தங்கவேலு சேலம் திரும்புகிறார்.  அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன்.
அப்போது,  அவருக்கு கிடைத்துள்ள பரிசு  பணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்த பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு கொடுக்க  முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம், பள்ளியின் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் செலவிடப்படும்  என்றார்.
மாரியப்பன் தங்கவேலுவின் தாயார் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். பரிசாக கிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்த வீடு ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளோம் என்றார்.