சென்னை:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

2015-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியான கோகுல் ராஜ் ஆவணக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, “கோகுல் ராஜ் கொலை வழக்கில் கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும், குற்றவாளிகள் ‘நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ எனக் கூறும் செய்திகளை ஒளிப்பரப்புவதை தவிர்க்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்திருக்கிறது.